திருச்சியில் உள்ள மாருதி மருத்துவமனையில், மரபணு மருத்துவத் துறையை மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் என்.ஹேமா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக, மருத்துவர் ரவி கூறியது: மாருதி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள மரபணு மருத்துவத் துறை மூலம் தலைமுடி உதிர்வைத் தடுத்து, மீண்டும் வளரச் செய்யும் சிகிச்சை, எலும்பு மஜ்ஜை, தசைகள், மூட்டு தேய்மானத்துக்கான சிகிச்சை, நரம்பு, மூளை, கல்லீரல், சிறுநீரகம், இதயம் பாதித்தவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு மணிப்பால் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் சிப்லா மருந்து நிறுவனம் இணைந்து, 10 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு நவீன ஸ்டெம் செல் சிகிச்சையை அரசு அங்கீகாரத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது புகைப்பிடிப்போர் மற்றும் சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, காலை வெட்டி எடுக்க வேண்டிய அவசியமின்றி, புதிய ரத்த நாளங்களை உருவாக்கி காப்பாற்றக் கூடிய சிகிச்சை. இளவயதினரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்டு, பலமடங்கு வளர்க்கப்பட்டு, ஒரு குப்பியில் 150-200 மில்லியன் செல்களாக 2 வித டோஸ்களாக விற்கப்படுகின்றன. மூட்டு தேய்ந்தவர்களுக்கும் ஸ்டெம்செல் சிகிச்சை அளிப்பதற்கான அங்கீகாரம் பெற அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை உலகிலேயே முதல் முறையாக மாருதி மருத்துவமனையில் அளிக்கப்பட உள்ளது என்றார்.
மரபணு மருத்துவ விஞ்ஞானி பவன் குப்தா, மணிப்பால் பல்கலைக்கழக ஸ்டெம்பெடிக் ஆராய்ச்சி மைய முதன்மை செயல் அலுவலர் பி.என்.மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago