திருச்சி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - தலைமை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது :

By செய்திப்பிரிவு

திருச்சி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி டெல்லி, விக்யான் பவனில் குடியரசுத் தலைவரால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 2 பேரில் திருச்சி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே.ஆஷாதேவியும் ஒருவர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆஷா தேவி கூறியது: 2013-ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற எனக்கு தற்போது தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

1988-ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். 2010-ல் பிராட்டியூர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றபோது, 71 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 816 ஆக உள்ளது.

இதற்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தியதும், மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி, சிலம்பம், யோகா, கணினி, கராத்தே உட்பட 10-க்கும் அதிகமான தனித்திறன் பயிற்சிகளை வழங்கியதும் காரணம். இதனால், பல்வேறு போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் பரிசுகளை பெற்று வருகின்றனர். இதனால், பெற்றோரும் முழு ஒத்துழைப்பை அளிக்கின்றனர்.

கரோனா காலத்தில் ஆன்-லைன் மூலமாகவும், 15 வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பாடங்களைப் பதிவேற்றியும் வகுப்புகளை நடத்தி வருகிறோம். செல்போன் இல்லாத மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தனியார் பள்ளிகளில் இருந்து 526 பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது பள்ளிக்கு கூடுதல் இடவசதி கேட்டும், பள்ளியைத் தரம் உயர்த்தவேண்டியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியர் மூலம் அரசிடம் கோரிக்கை விடுத் துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்