பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் : ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்.பி., டாக்டர் தீபாசத்யன் தகவல்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என புதிய எஸ்.பி., டாக்டர் தீபாசத்யன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, சென்னை ரயில்வே எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த டாக்டர் தீபா சத்யன் ராணிப்பேட்டை மாவட்டத்தின் 5-வது எஸ்.பி.,யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, ராணிப் பேட்டை எஸ்.பி.,யாக டாக்டர் தீபாசத்யன் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவருக்கு காவலர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதிதாக பொற்றுப்பேற்ற எஸ்.பி., டாக்டர் தீபாசத்யனுக்கு ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், எஸ்பி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எஸ்.பி., தீபா சத்யன் கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் என்னென்ன குறைகள் உள்ளன. அதில் முதலில் தீர்க்கப்பட வேண்டியது என்ன? என்பது ஆய்வு செய்து அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல் கடத்தல், கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை, ரவுடியிசம், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, சூதாட்டம், காட்டன் சூதாட்டம், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க புதிய வியூகம் அமைக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் எங்கெங் லாம் உள்ளதோ அதை ஆய்வு செய்து அங்கு போக்குவரத்து நெரிசல் குறைய நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் பற்றாக்குறையை தீர்க்கவும் உயர் அதிகாரி களிடம் கலந்தாலோசனை செய்து காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்துப்பணிகள் தீவிரப் படுத்தப்படும். மணல் திருட்டை தடுக்க தனிப்பிரிவு தொடங்கப்படும்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே நட்புணர்வு ஏற்படுத்த காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ராணிப்பேட்டை எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் தீபாசத்யன் கடந்த 2015-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். விருதாச்சலம் மாவட்ட காவல் உட்கோட்டத்தில் ஏஎஸ்பியாக பணியில் சேர்ந்த டாக்டர் தீபா சத்யன் அதன்பிறகு, சென்னை குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து இணை ஆணையராகவும், ரயில்வே எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.

மருத்துவம் படித்துள்ள எஸ்.பி.,தீபாசத்யன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சான்ஸ்கிரிட் உள்ளிட்ட மொழிகளில் புலமைப்பெற்றவர் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்