விழுப்புரம் பேருந்து நிலையம் இடையில் பராமரிப்பின்றி மோசமாக மாறிய சூழலில், தற்போதுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் தொடக்கமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப்பணிகளை அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார்.
பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். பேருந்து நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை உடனடியாக தூர்வார வேண்டும், காலியாக உள்ள இடங்களில் நவீன பூங்கா அமைத்திட வேண்டும், பேருந்து நிலையத்தில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாம்பழப்பட்டு சாலையில் அமைந்துள்ள சிறு மின்விசை மூலம் இயங்கும் தண்ணீர் தொட்டி பழுதை சரி செய்திட வேண்டும்; மழைநீர் தங்கு தடையின்றி செல்ல கோலியனூரான் வாய்க்காலை முழுவதுமாக தூர்வார வேண்டும். மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சாலைகளை சீரமைத்திட வேண்டும்; நுழைவு வாயிலில் மாற்றுத் திறனாளிகள் செல்ல ஏதுவாக சிமெண்ட் சாய்தளம் அமைக்க வேண்டும் எனநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago