பொற்பனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டுள்ள - எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்த முடிவு : தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொற்பனைக்கோட்டையில் உள்ள சங்ககால கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் தலைமையிலானோர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 19-வது நாளாக நேற்று அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுவரையிலான ஆய்வில் செங்கல் கட்டுமானத்திலான நீர்வழி பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், எலும்புகள், மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: அகழாய்வின்போது கண்டெடுக்கப்படும் அனைத்து பொருட்களுமே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில், மண்பாண்டங்கள் மற்றும் பானை ஓடுகள் போன்றவற்றை அங்கேயே, கழுவி சுத்தம் செய்து ஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும், பல விதமான அளவு, எடையில் ஏராளமான எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, மனிதர்களுடையதா அல்லது விலங்கினங்களுடையதா என்பதை கண்டறிவதற்காக மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

அதிலிருந்து கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் கார்பன் சோதனைக்கு உட்படுத்தி, எந்த ஆண்டைச் சேர்ந்தது என கணக்கிடலாம். இதுதொடர்பாக வல்லுநர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்