கோவை மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை சார்ந்து 5 லட்சம் தொழிலாளர்கள் வரை உள்ளனர். கரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரவலின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, உற்பத்தி நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதிப்புகளால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.
இந்நிலையில், கரோனா 3-ம் கட்ட பரவல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்தகட்ட பரவல் ஏற்பட்டாலும் தொழில் நிறுவனங்களை மூடாமல் தொடர்ந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அதற்கேற்ப அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களில் இதுவரை 1.25 லட்சம் பேருக்கு தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, “அனைத்து தொழிலாளர்களுக்கும் முதற்கட்ட தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். கோவையில் தொழில் நிறுவனங்களில் தொடர்ந்து பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களும் இதில் அடங்குவர்” என்றனர்.
கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, “கரோனா தொற்றின் முதல் இரு அலைகளின் பரவலால் ஏற்கெனவே தொழில் துறை பொருளாதார ரீதியாகவும், உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலும் 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அடுத்து 3-ம் அலை பரவல் குறித்து பேசத் தொடங்கி விட்டனர். கோவை, திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளன. இதனால் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என அனைவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்காக மீண்டும் தொழில் நிறுவனங்களை மூட முடியாது. அதற்கேற்ப நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் கூறும்போது, “தொழில் அமைப்புகளுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முடிந்த வரை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். இன்று கூட 3 தொழில் அமைப்புகள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த தேவையான உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வரத்தை பொறுத்தே அனைவருக்கும் செலுத்தும் காலத்தை முடிவு செய்ய முடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago