தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாழ்குடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி உழவர் பேரவை சார்பில் சுதந்திர தினத்தன்று நூதன விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். வாழ்குடை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போட்டி நடைபெற்றது. 1,500 மீட்டர், நீர், நிலம், நெருப்பு தாண்டுதல், மிதிவண்டி தொடர் ஓட்டம், 75 கிலோ மூட்டையை தூக்குதல், 5 லிட்டர் தண்ணீர் குடிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற விஜயகாந்த், துரை, ஜெய் ஆகியோருக்கு மண்வெட்டி, களைவெட்டி, அரிவாள் போன்றவை பரிசாக வழங்கப் பட்டன.
இதுகுறித்து மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் கூறும்போது, “உழவு தொழிலைவிட்டு இளைய தலைமுறை விலகி செல்கிறது. அவர்களை ஊக்குவிக்கவும், விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போட்டி நடத்தப் பட்டுள்ளது. 300 ஏக்கருக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். மேலும், வாழ்குடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து 80 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago