கரோனா 3-வது அலை பாதிப்பைக் குறைக்க செப்டம்பர் மாதத்துக்குள் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருச்சி ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் கரோனா 2-வது அலையின்போது ஒரே நாளில் அதிகபட்சமாக 1,750 பேர் பாதிக்கப்பட்டனர். இப்போது நாளொன் றுக்கு சரசாரியாக 63 ஆக உள்ளது. பாதிக்கப்படுவோர் பட்டியலில் மாநில அளவில் 10-வது இடத்தில் உள்ளோம்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 10.25 லட்சம் பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29.20 லட்சம் மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேற்பட்ட 20.93 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் இதுவரை 7.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 35.8 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 24.5 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50-60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டால் 3-வது அலையில் மருத்துவமனைக்கு செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால் திருச்சி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 10.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். செப்டம்பர் மாதத்துக்குள் 50 சதவீத இலக்கை எட்டிவிடுவோம். போதிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், கடந்த முறைபோல இம்முறை ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினை இருக்காது.
கரோனாவால் பாதிக்கப்படு வோரை கண்டறிவதற்காக ஆக.16-ம் தேதி முதல் தனித் தனி குழுக்கள் அமைத்து ஊரக, மாநகர பகுதிகளில் வீடுதோறும் சென்று கண்காணிக்க உள்ளோம். கரோனா காலத்தில் மூன்றாவது அலை ஏற்பட்டால், 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் என கூறி உள்ளனர். ஆனால் இதுவரை 5 சதவீதத்துக்கும் கீழான குழந்தை கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், திருச்சி அரசு மருத்துவம னையில் குழந்தைகளுக்கென சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை களுடன் கூடிய வளாகம் தயார் நிலையில் உள்ளது. செப்டம்பரில் குழந்தைகளுக் கான தடுப்பூசி வரும் என்கின்றனர்.
தற்போது முகக்கவசம் அணிவது குறைந்துவிட்டது. மக்களிடம் பயம் குறைந்துவிட்டது. கரோனா வந்த பிறகு சிகிச்சை பெறுவதைக் காட்டிலும், வராமல் தற்காத்துக் கொள்வதே நல்லது. தடுப்பூசி செலுத்திக்கொள்வது, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி மட்டுமே அதற்கான தீர்வுகள். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago