விசைத்தறிகள் மூலம் பள்ளி சீருடைகள் உற்பத்தி : பட்ஜெட் அறிவிப்புக்கு விசைத்தறியாளர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

விசைத்தறிகள் மூலமாக பள்ளி சீருடைகள் உற்பத்தி, துணி நூல் துறையில் கவனம் செலுத்த தனி வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு விசைத்தறியாளர் கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, விசைத்தறியாளர்களிடமிருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும், இதற்காக ரூ.409 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு துணி நூல் துறை மீது கவனம் செலுத்த தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக விசைத்தறி சங்க கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர் எம்.பாலசுப்ரமணியம் கூறும்போது, “நிதிநிலை அறிக்கையில் விசைத்தறியாளர்களுக்கு பள்ளி சீருடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தற்போதைய சூழலில் முக்கியமான விஷயம் ஆகும். கரோனா பாதிப்பு மற்றும் கூலி உயர்வு இல்லாமை ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. துணி நூல் துறையை மேம்படுத்த தனி வாரியம் அறிவித்துள்ளதும் நல்ல விஷயம்.

அதே நேரத்தில் வங்கிகளில் விசைத்தறியாளர்கள் பெற்ற மூலதனக் கடன் தள்ளுபடி, கூலி உயர்வு மற்றும் கட்டணமில்லா மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் என எதிர்பார்த்தோம். இதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும்” என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் சி.பழனிசாமி கூறும்போது, “துணி நூல் துறையை மேம்படுத்த தனி வாரியம் அமைத்தல், பள்ளி சீருடை ஒதுக்கீடு ஆகியவை வரவேற்புக்குரிய விஷயங்களே. ஆனால் விசைத்தறிக்கென பிரத்யேக அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. எங்களது கோரிக்கையான விசைத்தறிக்கென தனி வாரியம், கூலி உயர்வு குறித்த அறிவிப்புகள் வராதது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்