குற்றச் சம்பவங்களைத் தடுக்க, பூட்டப்பட்ட வீடுகள் குறித்து மக்கள் தகவல்தெரிவிக்க மாநகர காவல்துறை யினர் பிரத்யேக எண்களை அறிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் 15 சட்டம்ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. சட்டம் ஒழுங்கு மீறல் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, அந்தந்த காவல் நிலையங்கள் வாரியாக ‘பீட்’ பிரிக்கப்பட்டு, ரோந்துப் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்நிலையில், வீட்டின் கதவுப் பூட்டை உடைத்து நகை, பணத்தைதிருடுதல், சாலைகளில் நடந்துசெல்லும் பெண்களிடம் நகையை பறித்தல் போன்ற குற்றச் சம்பவங்கள் மாநகரில் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்த மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் செல்வோர், பிரத்யேக எண்கள் மூலம் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகர காவல் துறை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கோவை மாநகரில் வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் தனியாக வசிக்கும் வயதான நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வெளியூர் செல்லும் பொதுமக்கள் தங்களது வீடு இருக்கும் முகவரி குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யேக எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 94981 81213 என்ற அலைபேசிஎண் மற்றும் 81900-00100என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக தங்கள் வீட்டின் முகவரி குறித்து காவல்துறை யினரிடம் தெரிவிக்கலாம். அப்போது அந்தந்த பகுதி காவல் நிலையரோந்து காவலர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், வீட்டில் வயதானவர்கள் தனியாக வசிக்கும் பட்சத்தில், மேற்கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் காவலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் படும்,’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பொதுமக்க ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago