அரசுப் பள்ளியில்ஆண்டு விழா கொண்டாடுவதற்கான நிதி குறைப்பு : குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

By சி.பிரதாப்

அரசுப் பள்ளிகளில் குறைந்த தொகையைக் கொண்டு ஆண்டுவிழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். ஆண்டு விழா நடத்த பாரபட்சமின்றி எல்லா பள்ளிகளுக்கும் குறைந்தது ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி இலவச கட்டாயக் கல்வி , பெண்கல்வி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்துகிறது. இதற்காக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தச் சூழலில் நடப்புக்கல்வியாண்டில் 4,436 பள்ளிகளுக்கு மட்டும் ஆண்டு விழாவுக்கான நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ரூ.1.97 கோடி நிதி

இதுகுறித்து ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுடலைகண்ணன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட ரூ.1.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு சென்னை தவிர்த்து மற்ற 31 மாவட்டங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள 4,436 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் ஆண்டு விழா கொண்டாட முடிவாகியுள்ளது. இதர பள்ளிகள், கூடுதல் செலவினம் தேவைப்படும் பள்ளிகள் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று ஆண்டு விழாக்களை நடத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்டு விழா நிதி குறைப்பானது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துஅரசுப் பள்ளி தலைமையாசிரி யர்கள் கூறியதாவது:

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் ஆண்டு விழா கொண்டாட அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.6,000, தொடக்கப் பள்ளிக்கு ரூ.4,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மார்ச் மாதத்துக்குள் ஆண்டுவிழா நடத்த வேண்டும். கடந்த ஆண்டு தொடக்கப் பள்ளிக்கு ரூ.5,000, நடுநிலை பள்ளிக்கு ரூ.7,000 வழங்கிய நிலையில் இப்போது நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டு விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை அழைக்கவும், கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விருந்தினர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளுக்கு சிறு பரிசுகளாவது வழங்க வேண்டும்.

மேடை அமைத்தல், அலங்காரம் செய்தல், ஒலி, ஒளி ஏற்பாடுகள், உணவு, போக்குவரத்து செலவுகள் என குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஆண்டு விழாவுக்கு நன்கொடை வழங்க பலர் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் கூடுதல் செலவை ஆசிரியர்களே ஏற்க வேண்டும். இதை எல்லாம் அறிந்தும் சொற்பத் தொகையை வழங்கி ஆண்டு விழா நடத்த கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது.

மாநிலம் முழுவதும் 32,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் மாணவர் சேர்க்கை அதிகமுள்ள 4,436 பள்ளிகளுக்கு ஆண்டுவிழா கொண்டாட நிதி வழங்குவது மாற்றாந்தாய் மனப்பான்மையாக இருக்கிறது. மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளை அரசு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்வதாக சந்தேகம் எழுகிறது.

நிர்பந்தம் செய்யக்கூடாது

மேலும், அறிவிப்பில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான நிதி விவரங்கள் இடம்பெறவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு விழா நடத்த பாராபட்சம் இன்றி எல்லா பள்ளிகளுக்கும் குறைந்தது ரூ.10 ஆயிரம் நிதிஒதுக்க வேண்டும். இல்லையெனில் பள்ளிகளில் ஆண்டு விழாக்களை நடத்த அரசு நிர்பந்தம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்