பார்வையாளர்கள், கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஈரோட்டில் நாளை பார்வையாளர்கள் பங்கேற்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது வழக்கம். அதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்தம் வாரிசுகள், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், சமூக சேவகர்கள் கவுரவிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் முன்னிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது. அதேபோல், இந்த ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நாளை (15-ம் தேதி) காலை தேசிய கொடியை ஏற்றும் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, போலீஸ் அனுவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின்  வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆட்சியர் கவுரவிக்கவுள்ளார்.

இதைப்போல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் சுதந்திர தின விழாவின் போது, மாணவர்களை அழைக்காமல், தலைமை ஆசிரியர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்