திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் கைது - தனிப் படையினருக்கு ஆணையர் பாராட்டு :

By செய்திப்பிரிவு

திருச்சியில் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து நகைகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப் படையினரை மாநகர காவல் ஆணையர் அருண் நேற்று பாராட்டினார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் பெண்களிடம் திருடும் கும்பலைப் பிடிப்பதற்காக மாநகர காவல் துணை ஆணையர் முத்தரசு மேற்பார்வையில் கோட்டைக் குற்றப்பிரிவு ஆய்வாளர் அரங்கநாதன் தலைமையில் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

அதில் கிடைத்த தகவலின்பேரில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த அசோகன் மனைவி சுலோச்சனா(29), சிரஞ்சீவி மனைவி ரேகா(33) ஆகியோரைக் கைது செய்து 22 பவுன் தங்க நகைகளை தனிப்படையினர் இரு தினங்களுக்கு முன் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, பெரிய கடை வீதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றவரையும் 6 மணி நேரத்துக்குள் கைது செய்தனர்.

மேலும், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த புங்கனூர் காந்தி நகரைச் சேர்ந்த கிரிநாதனை அண்மையில் கைது செய்து 39 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் நகைகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப் படை போலீஸாரை நேற்று நேரில் அழைத்து மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்