கோவையில் போக்குவரத்து சிக்னல்களில் யாசகம் பெறுவோரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, சமூக நலத் துறையினருடன் இணைந்து செயல்பட காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகரில் 52 இடங் களில் மாநகர காவல்துறையின் சார்பில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாலசுந்தரம் சாலை, உப்பிலிபாளையம், லட்சுமி மில், பீளமேடு, காந்திபுரம், கிராஸ் கட் சாலை, குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டுநர்களிடம் சிலர் யாசகம் பெறும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
சிக்னலின் அருகே திருநங்கை கள், கண் பார்வையற்றவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோர் நின்றுகொண்டு, சிவப்பு விளக்கு விழுந்தவுடன், அங்கு நிற்கும் வாகன ஓட்டுநர்களிடம் சென்று பணம் கேட்டு வருகின்றனர். சில இடங்களில் கைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம் பெண்கள் யாசகம் கேட்கின்றனர். பணம் அளிக்காத வாகன ஓட்டுநர்களை திட்டும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மேலும், பச்சை விளக்கு போட்டவுடன் நகர்ந்து செல்லாமல், சாலைகளின் குறுக்கே நடந்தபடி சுற்றுவதால் விபத்துகளும் நடக்கின்றன.
இதுகுறித்து, மாநகர காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. சமூக செயல்பாட்டாளர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘சிக்னல் களில் யாசகம் பெறுவோரை பார்க்க பரிதாபமாக இருந்தாலும், அவர்களது செயல்பாடுகளால் விபத்துகள் நேரிடுகின்றன.
இவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து, சிக்னல்களில் யாசகம் பெறும் நபர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சமூகநலத் துறையுடன் இணைந்து செயல்பட சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயச்சந்திரன் ‘இந்து தமிழ்திசை’ செய் தியாளரிடம் கூறும்போது,‘‘சிக்னல் களில் யாசகம் பெறுவோரை மீட்டு, சமூகநலத்துறையின் மூலம் அவர்களுக்கு சுயதொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதையும் மீறி மீண்டும் சிக்னல்களில் இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago