சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் - தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் கடைகளைத் திறந்தால் ‘சீல்’ : ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சனி, ஞாயிறுகளில் அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில் கடைகளைத் திறந்தால், சீல் வைப்பதோடு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. டாஸ்மாக் உட்பட அனைத்து விதமானகடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு விதிமுறைகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதில் சனி மற்றும் ஞாயிறுகளில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளில், பால், மருந்தகம், மளிகைக் கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை, மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரில், தாளவாடி பஸ்வேஸ்வரா பேருந்து நிலையம், டி.என். பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை (சனி) மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மற்ற கடைகள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் எச்சரித்துள்ளார். தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் பிற கடைகள் திறக்கப் பட்டிருந்தால், அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதோடு, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்