திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு தலா ஒரு டயாலிசிஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் தெரிவித்தார்.
கரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் கரோனா மூன்றாம் அலை தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். கரோனா சிகிச்சை மட்டுமல்லாது சர்க்கரை, ரத்த அழுத்தம், விபத்து போன்ற அனைத்து சிகிச்சைகளும் சிறந்த முறையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மிகச்சிறந்த முறையில் கிடைக்க வேண்டும்.
இதற்காக திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு தலா ஒரு டயாலிசிஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொல்லிமலை அரசு மருத்துவமனையில் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் முன்னாள் இயக்குநர் இன்பசேகரன், இணை இயக்குநர் (பொறுப்பு) அ.ராஜ்மோகன், தேசிய குழும திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.ரங்கநாதன், செந்தில்குமார், வினோதினி மற்றும் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago