உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழக பாஜக சார்பில் 75-வது சுதந்திர தினத்தை `மகிழ்ச்சி திருவிழா'வாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். வரும் 15-ம் தேதி தமிழக பாஜக முக்கியத் தலைவர்கள் தமிழகத்தில் 75 இடங்களுக்கு நேரில் சென்று சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். முதல் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற வேலூர் கோட்டைக்கு சென்று, போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்த இருக்கிறேன்.

தமிழகத்தில் பாஜகவுக்கு 1,104 மண்டலங்கள் உள்ளன. இந்த 1,104 இடங்களிலும் நடக்கும் சுதந்திர தின விழாவில் ஏதாவது ஒரு பள்ளி மாணவர் அல்லது மாணவி தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இவ்விழாவில் அரசியல் சார்பில்லாத முக்கியப் பிரமுகர்களை அழைத்து கவுரவப்படுத்த இருக்கிறோம்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், ‘மக்கள் ஆசி யாத்திரை’ என்ற யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார்.

ஆகஸ்ட் 16-ம் தேதி காலை கோவையில் இந்த யாத்திரையை தொடங்கும் அவர் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் 3 நாட்கள் பயணிக்கிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது அமைந்த அதிமுக – பாஜக கூட்டணி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களையும் எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு நடத்துவோம். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் அதுபற்றி பேசுவது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்