கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் (19) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அம்மை நோயால் எனது 6 வயதில் 90 சதவீத செவித்திறனை இழந்தேன். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். செவித்திறன் குறைபாடு உடையோருக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று 11 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளேன். சர்வதேச அளவிலான செவித்திறன் குறைபாடு உடையோருக்கான தடகளப் போட்டிகள் வரும் ஆக.23 முதல் 28 வரை போலந்து நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக டெல்லியில் நடத்தப்பட்ட தகுதிப்போட்டிகளில் நான் தகுதிபெற்றும் எனது பெயர் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.
தேர்வுக் குழுவினர் 10 ஆண்களை மட்டும் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் நான் ஒருவர் மட்டுமே பெண் என்பதால் என்னை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர். எனது நிலையை அறிந்த எம்பி-க்கள் விஜய் வசந்த், திருமாவளவன் ஆகியோர் எனக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் உள்ள அகில இந்திய செவித்திறன் குறைபாடு உடையோருக்கான விளையாட்டு கவுன்சில் தலைவர், பாலின பாகுபாட்டுடன் செயல்படுகிறார். எனவே, என்னை போலந்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இப்போட்டியில் நான் கலந்து கொள்வதாக இருந்தால் ஆக.16 அன்று இந்தியாவில் இருந்து புறப்பட வேண்டும் என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச தடகளப்போட்டிகளில் பங்கேற்க அனைத்து தகுதிகளைப் பெற்றும் தடகள வீராங்கனையான சமீஹா பர்வீனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் இன்று (ஆக.13) உரிய விளக்கமளிக்காவிட்டால் உயர் நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க நேரிடும், என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago