திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டி மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் பிர தமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். முன்னதாக பல்வேறு மாநிலங்களில் உள்ள சுயஉதவிக் குழுவினரின் செயல் பாடுகள் குறித்த வெற்றிக்கதைகள் தொகுக்கப்பட்ட நூலை பிரதமர் வெளியிட்டார்.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியில் உள்ள சுயஉதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது பஞ்சம்பட்டி சுய உதவிக் குழு பொறுப்பாளர் ஜெயந்தி கூறுகையில், 2010-ம் ஆண்டு ரூ.5 லட்சம் முதலீட்டில் பாலித்தீன் மறுசுழற்சி மையத்தை தொடங்கினோம். சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து பாலித்தீன் கழிவுகளை சேகரித்து, அவற்றை தரம் பிரிக்கிறோம். பின்னர், பாலித்தீன் கழிவுகளை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி, தார் கலவையுடன் சேர்த்து சாலை அமைப்பதற்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை ரூ.5-க்கு பெற்று மறுசுழற்சி செய்து, அதை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்கிறோம். இதுவரை ரூ.30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. பாலித்தீன் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு படுவது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இவருடன் பேசிய பிரதமர் மோடி, "உங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், சமுதாயத்துக்கு சேவை செய்யும் நோக்குடன் செயல்பட்டுள்ளீர்கள். கிராமப் புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள். உங்கள் குழுவில் படிக்காதவர்கள் யாரா வது இருந்தால் அவர்களை படிக்கவையுங்கள். இதுவும் சமுதாய சேவைதான். சுயஉதவிக் குழுவினர் சமுதாயத்துக்குச் சேவை செய்து முன்னுதாரணமாக திகழ வேண்டும்" என்று கூறினார்.
பிரதமருடனான உரையாடல் முடிந்த பின்பு பஞ்சம்பட்டி மகளிர் குழுவினரை மொபைல்போன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்ட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பாராட்டுத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago