திருநெல்வேலி மற்றும் தென் காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசால் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற் கொண்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி திருநெல்வேலி அருகே சங்கர்நகர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது. இப்பணிகள் ஒருவார காலத்துக்கு நடைபெறும் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது,
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளுக்கும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,200 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தொடர் எண்கள், தயாரிக்கப் பட்ட ஆண்டு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய த்துக்கு உட்பட்ட காரவிளை சமூகநலக்கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் ஆய்வு மேற்கொண்டார். கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago