வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்களை உழவர் சந்தையில் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேன்மைப்பெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து வேலூர் மாவட்டவேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இதில், 1,662 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி நான்கு உழவர் சந்தைகளிலும் சுமார் 85 மெட்ரிக் டன் காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மட்டும் 690 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர் . இங்கு, அதிகப்படியாக தினசரி 40 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், அரியூர், ஊசூர், ஜி.ஆர்.பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினசரி சராசரியாக 150 விவசாயிகள் அனைத்து வகையான காய்கறிகள், பழ வகைகளையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் 416 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, தினசரி 25 மெட்ரிக் டன் காய்கறிகள், கீரை மற்றும் பழங்கள் விற்பனை செய் யப்பட்டு வருகின்றன.
இந்த உழவர் சந்தைக்கு காட்பாடி, கே.வி.குப்பம், மேல்மாயில், லத்தேரி, கரசமங்கலம், கார்ணாம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமப் புறங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின் றனர்.
இதேபோல, குடியாத்தம் ராபின்சன் குளக்கரை அருகே உள்ள உழவர் சந்தையில் சுமார் 461 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு, குடியாத்தம் வட்டத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
மேலும், வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தையில் 95 விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வரும் விவசாயிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, வாடகையில்லா கடை மற்றும் எடை தராசு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவறை வசதி, கமிஷன் மண்டி, இடைத்தரகர் இல்லாமல் கூடுதல் விலை போன்ற சிறப்பம்சங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தருவதால், விவசாயிகளுக்கும், நுகர்வோர் களுக்கும் இடையே முழு மன நிறைவு ஏற்படுகிறது.
இந்நிலையில், உழவர் சந்தைகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து பகுதிகளில் இயங்கி வரும் உழவர் சந்தைகள் அனைத்தும் விரைவில் புதுப்பிக்கப் படவுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் இடங்களில் அமைக்கப்பட் டுள்ள உழவர் சந்தைகளுக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக காய்கறி மற்றும் பழங்களை வாங்கி உழவர்களின் வாழ்வு மேலும் சிறக்க அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
மேலும், விவசாயிகள் உழவர் சந்தையில் உறுப்பினராக இணைய ஆவணங்கள் குறித்து விளக்கம் பெற வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் வேளாண் துணை இயக்குநர் 90039-21717 அல்லது நிர்வாக அலுவலர் 94439-68990, 74010-75030 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித் துள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளுக்கு சென்று விவசாயிகளிடம் நேரடியாக காய்கறி மற்றும் பழங்களை வாங்கி உழவர்களின் வாழ்வு மேலும் சிறக்க அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago