சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - உழவர் கூட்டமைப்பினர் போராட்டம் :

By செய்திப்பிரிவு

குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு 1,000 அஞ்சல் அட்டை அனுப்பும் நூதனப் போராட்டத்தில் இந்திய ஒருங்கிணைந்த உழவர் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என குமாரபாளையம் மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி இந்திய ஒருங்கிணைந்த உழவர் கூட்டமைப்பினர் புகார் எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு 1,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுதொடர்பாக கூட்டமைப்பின் அமைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:

பல்லக்காபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள பெதக்காட்டூர், குட்டிகினத்தூர், பூசாரிகாடு, மேட்டுக்கடை, அருவங்காடு, செங்கமாம முனியப்பன்கோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது. இதை வலியுறுத்தி முதல்வருக்கு 1,000 அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்