பூச்சி மருந்துக் கடைகள் வைக்க பட்டயப்படிப்பு அவசியம் : ஈரோடு வேளாண் இணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

உரம், பூச்சி மருந்துக்கடைகள் தொடங்கி நடத்துவதற்கு ஓராண்டு வேளாண் படிப்பு பட்டயச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் இடுபொருட்களான விதைகள், பூச்சிமருந்துகள் மற்றும் உரங்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு கடைகளை நடத்துவோர், வேளாண் சாகுபடி விபரங்களையும், பூச்சி நோய் தாக்குதலையும் கண்டறிந்து அதற்கேற்ப இடுபொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக வேளாண் சார்ந்த பயிற்சியில் கல்வித் தகுதி பெற்றிருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி உரம், பூச்சிமருந்து விற்பனையாளர்கள் இடுபொருள் விற்பனை மையம் தொடங்கும் போது, குறைந்த பட்சம் ஒரு வருடம் வேளாண்மை பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பெற்ற சான்று இருக்க வேண்டும். ஒரு வருட பட்டயப்படிப்பிற்கான பயிற்சியை வழங்கிட, ஈரோடு அக்காஸ் நிறுவனத்தினை மத்திய அரசு நிறுவனமான, ‘மேனேஜ்’ ஹைதராபாத் மற்றும் மாநில அரசு நிறுவனமான ஸ்டாமின் ஆகியன அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஈரோடு திண்டலில் இப்பயிற்சி வகுப்புகளை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி தொடங்கி வைத்து பேசும்போது, ‘வேளாண் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஓராண்டு பயிற்சியில் தேர்ச்சி பெறும் பங்கேற்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, பூச்சிமருந்து ஆய்வக வேளாண்மை துணை இயக்குநர் பி.அசோக்குமார், ஈரோடு வேளாண் இடுபொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர் தங்கமுத்து, அக்காஸ் தலைவர் எம்.எஸ்.துரைசாமி, செயலாளர் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்