சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் - வியாபாரி ஜெயராஜ் மகள் 2 மணி நேரம் சாட்சியம் :

By கி.மகாராஜன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கொலையான ஜெயராஜ் மகள் பெர்சி, மதுரை நீதிமன்றத்தில் 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஜூன் 19-ல் ஊரடங்கு காலக்கெடு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகன் இருவரையும் போலீஸார் கடுமையாகத் தாக்கியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து முதலில் சிபிசிஐடி போலீஸாரும், பின்னர் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை ஆகியோரைக் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பத்மநாபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மகள் பெர்சி நீதிமன்றத்தில் ஆஜராகி 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தம்பி பென்னிக்ஸ் 2020 ஜூன் 20-ல் மாமாவின் செல்போனில் என்னை அழைத்தார். பென்னிக்சால் பேசக்கூட முடியவில்லை. அக்கா என அழைத்துவிட்டு போனை வைத்து விட்டார்’ என்றார். அவரிடம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

பின்னர் விசாரணையை ஆக. 16-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஜெயராஜ் மனைவி செல்வராணி ஆக. 4-ல் 3 மணி நேரம் சாட்சியளித்தார். அடுத்த விசாரணையில் பென்னிக்ஸின் மாமா தேசிங்குராஜா சாட்சியம் அளிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்