சிறந்த பேரூராட்சியாக கல்லக்குடி தேர்வு - மக்களின் ஒத்துழைப்பே விருதுக்கு முக்கிய காரணம் : செயல் அலுவலர் கருத்து

By செய்திப்பிரிவு

மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சியாக கல்லக்குடி தேர்வு செய்யப்பட்டதற்கு மக்களின் முழு ஒத்துழைப்பு முக்கிய காரணம் என்று செயல் அலுவலர் எஸ்.சாகுல் அமீது தெரிவித்தார்.

மக்களுக்கான அடிப்படை தேவைகளை சிறப்பாக மேற் கொண்டதற்காக முதல்வரின் விருதுக்கு தமிழகத்தில் 3 பேரூராட் சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில்,திருச்சி மாவட்டம் கல்லக் குடி முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக இந்தப் பேரூராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படவுள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப் பட்டது குறித்து கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.சாகுல் அமீது, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

நிகழாண்டில் தமிழகத்தில் சிறந்த பேரூராட்சியாக கல்லக்குடி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர் விநியோகம், திடக் கழிவு மேலாண்மை, சுகாதாரப் பணிகள், நிதி நிர்வாகம், தெரு விளக்குகள் பராமரிப்பு, வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய 8 அம்சங்களில் சிறந்து விளங் கியதற்காக முதல்வரின் விரு துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கல்லக்குடியில் 1.60 ஏக்கர் பரப்பில் மக்களின் ரூ.15 லட்சம் நன்கொடையில் 24,000 நாட்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து அடர்வனக் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் இருந்து பெறும் குப்பையை தரம் பிரித்து காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து, கிலோ ரூ.10 விலையில் விற்பனை செய்கிறோம்.

மேலும், நாட்டுமாட்டின் கோமியத்தில் இருந்து ஜீவாமிர்தம் தயாரித்து விவசாயிகளுக்கு லிட்டர் ரூ.5 விலையிலும், மண்புழு உரம் தயாரித்து கிலோ ரூ.25 விலையிலும் விற்பனை செய்து வருகிறோம். தையல் கடைகளில் கிடைக்கப் பெறும் துணிக் கழிவுகளில் இருந்து மிதியடிகள், சிறிய பைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பையைத் தரம் பிரித்து வழங்குதல் என பல்வேறு அம்சங்களில் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின் றனர்.

தொடர்ந்து, சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது, மலக்கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குளத்தில் கொண்டு சேர்ப்பது ஆகிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்