`ராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு தடையில்லாச் சான்று அளிக்க வேண்டும்' என, தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜிடம் வலியுறுத்தப்பட்டது.
இவரிடம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம உதயசூரியன் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென்பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதியில் உள்ள 21 குளங்களின் நீராதாரத்தை உறுதிப்படுத்த ராமநதி - ஜம்புநதி கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ராமநதி அணையின் உபரிநீரை ஜம்புநதியின் பாசனப் பகுதிகளுக்கு கொண்டு வருவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தால் 4,050 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 729 கிணறுகள் செறிவூட்டப்படும்.
கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. ஆய்வுப் பணிக்கு ரூ.40 லட்சம், நிலம் கையகப்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நபார்டு வங்கி மூலம் ரூ.41.08 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால், உரிய அனுமதி பெறாததால் வனத்துறையால் பணி நிறுத்தப்பட்டது. வனத்துறை அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ளது. 60 ஆண்டுகால கனவுத் திட்டமான இத்திட்டத்தை செயல்படுத்த வனத்துறையின் தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளனர்.
`திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தொழில்நுட்ப பிரச்சினைகள் அல்லது தவறுகள் எதுவும் இல்லை. உதவி முதன்மை வனப்பாதுகாவலரிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன. அவை கிடைத்தவுடன் திட்டம் விரைவில் நிறைவேற ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என தலைமை வனப்பாதுகாவலர் பதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago