செங்கம் அருகே அரிதாரிமங்கலம் கிராமத்தில் சோழர் கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையிலான குழு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த அரிதாரிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முன்பு சாலையோரத்தில் பாதியளவு புதைந்திருந்த நடுகல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டது. 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது.
இடது கையில் கத்தி, வலது கையில் அம்பை பிடித்து கொண்டு வீரன் இருப்பது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல் மேற்பகுதியில் 5 வரிகள் மற்றும் பின் பகுதியில் 6 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அதனை கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் மூலம் தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில், மதிரை கொண்ட பரகேசரி எனும் பட்டம் உடைய பராந்தக சோழனின் 33-வது ஆட்சியாண்டில் (கி.பி.940) நடுகல் வெட்டப்பட்டுள்ளது.
அதிராகமங்கலம் என்ற ஊரில் நடைபெற்ற யுத்தத்தில் ஈடுபட்டு கலிமுகற் பெருங்கருமான் மருமகன் மலையன் உயிரிழந் துள்ளார் என நடுகல்லில் குறிப் பிடப்பட்டுள்ளது. அதிராக மங்கலம் என்பது அரிதாரி மங்கலம் என அழைக்கப்படுகிறது. வீரனின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல், முற்காலத்தில் வழி பாட்டில் இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் மண்ணில் புதைந்து போனது” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago