கோவை - கரூர் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

By செய்திப்பிரிவு

கோவை-கரூர் சாலையை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கோவையில் நேற்று நடைபெற்றது. பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா சிகிச்சை அளிக்க கோவையில் 2,234 ஆக்ஸிஜன் படுக்கைகள் ரூ.11 கோடி மதிப்பிலும், திருப்பூரில் 723 ஆக்ஸிஜன் படுக்கைகள் ரூ.3.28 கோடி மதிப்பிலும், ஈரோட்டில் 916 ஆக்ஸிஜன் படுக்கைகள் ரூ.10.46 கோடி மதிப்பிலும், நீலகிரியில் 428 ஆக்ஸிஜன் படுக்கைகள் ரூ.3.72 கோடி மதிப்பிலும், கரூரில் 633 ஆக்ஸிஜன் படுக்கைகள் ரூ.2.36 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடங்களை கட்டும்போது தரமாக கட்ட வேண்டும் எனவும், தண்ணீர், மண், சிமெண்ட், எம்-சாண்ட், ஜல்லி, கம்பிகளை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன். உதகை செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து தடைபடுகிறது. எனவே, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுவர் எழுப்பி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. அதுதொடர்பாக கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூரில் இருந்து கோவைக்கு வரும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அதை நான்கு வழிப்பாதையாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தொலைபேசியில் பேசியுள்ளேன்.

அந்த வழித்தடத்தில் 2024-க்குள் பசுமை சாலை அமைக்க முயற்சி எடுக்கப்படும். நிலம் கையகப்படுத்துதல், திட்ட மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளப்படும். சாலையோரம் மரங்கள் குறைவாக இருப்பதால், அங்கு மரங்களை வளர்க்க முன்னுரிமை அளிக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல இடங்களில் நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பால பணிகளை நிறைவேற்ற மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்