ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல் : போலீஸ்காரர் துரத்தியதால் விபத்தில் சிக்கியது

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ராம்நகர் சிம்மகுர்தி பகுதியைச் சேர்ந்தவர் பானுபிரகாஷ் (20). வாடகைக் கார் ஓட்டுநர். ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு சவாரிக்கு சென்ற பானுபிரகாஷ், மீண்டும் ஆந்திரா புறப்பட்டார். வழியில் சென்னை காவாங்கரை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்தி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இருவர் பானுபிரகாஷை தாக்கிவிட்டு, அவர் ஓட்டிவந்த காரைக் கடத்திச் சென்றனர். இதுகுறித்து பானுபிரகாஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு வந்து விசாரித்து, அனைத்து வாகன சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு மைக் மூலம் தகவல் தெரிவித்தனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் காசிராஜா, கடத்திச் செல்லப்பட்ட காரைப் பார்த்ததால், தனது இருசக்கர வாகனத்தில் அதை துரத்திச் சென்றார். இதைப் பார்த்த கடத்தல்காரர்கள், காரை வேறு திசைக்கு திருப்ப முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையின் மையத் தடுப்பில் சிக்கி, கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்தக் காரை அங்கேயே விட்டுவிட்டு, கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர்.

பின்னர், மீட்கப்பட்ட கார், பானுபிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைமறைவான கார் திருடர்களை புழல் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், துரிதமாகச் செயல்பட்டு, கார் திருடர்களை துரத்திய காவலர் காசிராஜாவை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்