பாகிஸ்தான் போரில் பங்கேற்ற - மூத்த கடற்படை அதிகாரி கோபால் ராவ் காலமானார் : ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற கடற்படை அதிகாரி கே.பி.கோபால் ராவ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.

மதுரையில் கடந்த 1926 நவம்பர் 13-ம் தேதி கோபால் ராவ் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து, 1950-ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைந்தார்

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரின்போது, ஐஎன்எஸ் கில்தான் என்ற கடற்படைப் பிரிவுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அப்போது, கடற்படையின் ஒரு சிறிய பணிக் குழுவைக் கொண்டு, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை குண்டு வீசி தாக்கியும், தீவைத்தும் எரித்தார். இத்தாக்குதலில் அந்நாட்டின் 2 பெரிய கப்பல்கள் தகர்க்கப்பட்டன.

இப்போரில் கோபால் ராவ் சிறப்பாக செயல்பட்டதற்காக, நாட்டின் 2-வது உயரிய ராணுவ விருதான ‘மகாவீர் சக்ரா’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த போர் வெற்றியைக் குறிக்கும் விதமாக, ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் கோபால் ராவ் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு தமிழகம், புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி புனித் சதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பெசன்ட் நகரில் உள்ள சுடுகாட்டில் முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கோபால் ராவுக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்