அழகிய தீவு, படகு சவாரி, பூங்காக்களுடன் - வண்டியூர் கண்மாயை சுற்றுலா தலமாக்கும் திட்டம் கைவிடப்பட்டது : பொதுப்பணி துறை ஒப்புதல் வழங்காததால் கைவிரித்த மாநகராட்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

நடுவில் அழகிய தீவு, படகு சவாரி, பூங்காக்களுடன் ரூ.60 கோடியில் வண்டியூர் கண்மாயை சுற்றுலாத் தலமாக்கும் திட்டத்தை பொதுப்பணித் துறை ஒப்புதல் வழங்காததால் மாநகராட்சி கைவிட்டது.

மதுரை நகரில் 557 ஏக்கரில் வண்டியூர் கண்மாய் பரந்து விரிந்து காணப்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் இந்த கண்மாய்க்கு சாத்தையாறு அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற கண்மாய்களில் இருந்தும் தண்ணீர் வருவதால் மழைக் காலங்களில் வேகமாக நிரம்பும்.

ஆனால், இந்த தண்ணீரை முறையாகத் தேக்கி வைக்க கண்மாய் தூர்வாரப்படவில்லை. கரைகளை பலப்படுத்தவில்லை. அதனால் கண்மாய் நிரம்புவதற்கு முன்பே உடைந்து தண்ணீர் வீணாக வைகை ஆற்றில் கலப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்த கண்மாய் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் இந்த கண்மாயை நம்பி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால் இந்த கண்மாய் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

இந்த கண்மாயை மேம்படுத்தி உள்ளூர் மக்களுக்கு சுற்றுலாத் தலமாக்க மாநகராட்சியும், சுற்றுலாத் துறையும் இணைந்து முடிவெடுத்தன. அதற்காக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.60 கோடியில் கண்மாய் நடுவில் அழகிய தீவு, படகு சவாரி, கண்மாயை சுற்றிலும் நடைபாதை, பூங்காக்கள், சைக்கிளிங் பாதை, மின் விளக்குகள், சமுதாயக் கழிப்பிடங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மாநகராட்சி முயற்சி செய்தது.

நகரில் பெரிய பொழுதுபோக்கு இடங்கள் இல்லாததால் வண்டியூரை சுற்றுலாத் தலமாக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இந்த திட்டம் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கண்மாய் பொதுப்பணித் துறை வசம் இருப்பதால் அவர்கள் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. அவர்கள், பாசனத்துக்கு தண்ணீர் தேக்குவதற்கு கண்மாய் தேவைப்படுவதாகவும், சுற்றுலா மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா திட்டம் கைவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்