திசையன்விளையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திசையன்விளை அருகே குமாரபுரத்தை சேர்ந்த மினிபேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், கரோனா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து அவரது வீட்டிலுள்ளவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வீட்டிலிருந்த மற்ற 5 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, அந்த கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர். கிராமத்திலுள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தலா 3, மானூர், பாளையங்கோட்டை, களக்காடு வட்டாரங்களில் தலா 2, வள்ளியூர் வட்டாரத்தில் 6, சேரன்மகாதேவி வட்டாரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்