மக்களுக்கு கரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமே உள்ளது - 3-வது அலையால் கோவையில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு : எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவையில் கரோனா 3-வது அலையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. மாவட்டகரோனா தடுப்பு சிறப்பு அலுவல ரான அரசு முதன்மைச் செயலர் எம்.ஏ.சித்திக் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராமற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எம்.ஏ.சித்திக் கூறியதாவது: மாவட்டத்தில் சராசரியாக தினசரி 200 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் கரோனா எதிர்ப்பு சக்தி குறித்து மாவட்ட வாரியாக ஆய்வுநடத்தப்பட்டது. இதில், கோவையில் மக்களுக்கு கரோனா எதிர்ப்புசக்தி 43 சதவீதமாக உள்ளது. அதேசமயம், சென்னையில் கரோனா எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக உள்ளது. இதன்காரணமாக, கோவையில் 3-வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவத் துறையினர் தயாராக இருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்குள் 3-வது அலை வர வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினிகளை கொண்டு கைகளை கழுவுதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். கோவைக்கு கரோனா தடுப்பூசிகளை அதிகளவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் படுக்கையை அதிகரிக்க, சென்னையில் இருந்து ஆக்சிஜன் டேங்க் கோவைக்கு மாற்றப்படுகின்றது. இம்முறை கரோனா பாதிப்பு எல்லா மாவட்டங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு குறைவு. எனவே,தேவைப்பட்டால் பக்கத்து மாவட்டங்களில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கோவையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இருப்பதால், நிறைய உயிர்ச்சேதம் இல்லாமல் 3-வது அலையை எதிர்கொள்ள முடியும். அடுத்த 2 மாதங்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம்முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்சிஜன் படுக்கைகளும், 82 ஐசியூ படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவ மனையில் 40 ஆக்சிஜன் படுக்கை களும், 30 ஐசியூ படுக்கைகளும் தயாராக உள்ளன.

தேவையான மருத்துவர்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்