ஈரோடு நிதி நிறுவன அதிபர் கொலை தொடர்பாக சரணடைந்த நான்கு பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணை நேற்று நிறைவடைந்தது.
ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (40). அதிமுகவைச் சேர்ந்த இவர், நிதி நிறுவனம் மற்றும் கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் அம்மா பொது இ—சேவை மையம் நடத்தி வந்தார். கடந்த 2-ம் தேதி இ-சேவை மையத்தில் இருந்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் மதிவாணனை வெட்டிக் கொலை செய்தது. கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையில், மதிவாணனை கொலை செய்ததாக ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரைச் சேர்ந்த நிஜாமுதீன் (35), அதேபகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (21), கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த தேவா ( 21), நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த விக்கி (25) ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இவர்கள் நால்வரையும், நீதிமன்ற அனுமதியின்பேரில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து கருங்கல்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணை குறித்து காவல்துறையினர் கூறும்போது, மதிவாணனுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக, ரவுடிகளை ஏவி கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
தற்போது சரணடைந்துள்ள நிஜாமுதீன் உட்பட நால்வரும், கொலையான மதிவாணன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில், நிஜாமுதீனைக் கொலை செய்ய மதிவாணன் திட்டம் திட்டியது தெரியவந்ததால், அவர் மூன்று பேருடன் வந்து மதிவாணனைக் கொலை செய்துள்ளார். இதற்கான ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago