தேசிய கடல் மீன்வள சட்ட மசோதாவுக்கு புதுவையில் எதிர்ப்பு - 18 மீனவ கிராமங்களில் போராட்டம் :

By செய்திப்பிரிவு

தேசிய கடல் மீன்வள சட்டமசோதாவை எதிர்த்து புதுச்சேரியில் நேற்று 18 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகு களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவ பெண்களும் மீன் விற்பனையில் ஈடுபடவில்லை.

இதுபற்றி சோலைநகர் மீனவர்கள் கூறுகையில், “தேசிய கடல் மீன்வள சட்ட மசோதாவினால் மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் முன் அனுமதி வாங்க வேண்டும். குறிப்பிட்ட தொலைவு மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். மீனவர்களை கடலோர காவல்படை கண்காணிப்பதுடன், அவர்களின் புதிய விதிகளை மீறியதாகக் கருதினால் படகு, மீன்வலைகளை பறிமுதல் செய்யும். தனியாருக்கு சாதகமான அம்சங்கள்தான் இருக்கிறதே தவிர, மக்களுக்குஆதரவாக ஏதும் இல்லை.தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட முடிவு எடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

காலாப்பட்டு மீனவ கிராம பஞ்சாயத்தார் கூறுகையில், “மீன்பிடிக்கச் செல்லாததால் ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தப்பட்சம் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும்” என்று குறிப்பிட்டனர்.

இதற்கிடையில் சோலை நகர் உள்ளிட்ட பல இடங்களில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் தரப்பில் கூறுகையில், “மீன்வளத்தை பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன்பிடி தொழிலுக்கு தேசிய கடல் மீன்வள மசோதா கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இந்திய கடல் பகுதி மூன்றாக வரையறை செய்யப்பட்டு, நிலப்பரப்பில் இருந்து 12 கடல் மைல் வரையிலான பகுதி அண்மை கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல்மைல் வரையிலான பகுதி சிறப்பு பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் பன்னாட்டு கடல் பகுதி என குறிப் பிடப்படுகிறது. வழக்கமாக 200 கடல் மைல் வரை சுதந்திரமாக மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். ஆனால் தற்போதைய மசோதாவில் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க கூடாது. கடல் தொழிலுக்கு மீன்பிடி உரிமம் பெறுவது கட்டாயம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கு மாறாகவோ, கூடுதலாகவோ மீன் பிடிக்கப்பட்டிருந்தால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை வழங்கவும், 5 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையிலும் கடல் மீன்வள சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்