தமிழகத்திலேயே முதன்முறையாக - இளையான்குடி அருகே அமைகிறது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி நகரம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்திலேயே முதன்முறையாக சிவ கங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான தனி நகரம் அமைக்கப்படுகிறது.

இளையான்குடி வட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து வீடில்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒட்டுமொத்தமாக வீட்டுமனைப் பட்டா வழங்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை மேற் கொண்டார்.

மேலும் அவர்களுக்கு தனித்தனியாக பட்டா கொடுப்பதை விட ஒரே இடத்தில் வழங்கி, மாற்றுத் திறனாளிகளுக்கென தனி நகரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இளையான்குடி அருகே கீழாயூரில் 5 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த வீடில்லாத 130 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 2 சென்ட் ஒதுக்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன.

இதுதவிர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பூங்காக்கள், பள்ளி, ரேஷன் கடை போன்றவையும் அமைக்கப்பட உள்ளன. இதேபோல் அனைத்து அடிப்ப டை வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. இந்த திட்டம், தமிழகத்தில் முதன்முறையாக இளையான்குடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் வரவேற்பை பெற்றால், இதேபோல் மற்ற வட்டங்களிலும் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த் கூறுகையில், ‘இடம், பயனாளிகள் தேர்வு செய்யும் பணி முடிந்து விட்டது. விரைவில் திட்டம் தொடங்கி வைக்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்