நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், மிளகு, காபி போன்ற நீண்ட கால பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மிளகு மட்டும் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மிளகு கொடியில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூ வைக்கும் சீஸன் தொடங்கும். அடுத்தடுத்த மாதங்களில் காய்பிடிப்பு ஏற்படும். தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதம் மிளகு அறுவடைக்கு தயாராகிவிடும்.
தற்போது பூ வைக்கும் சீஸன் தொடங்கியுள்ளது. சீஸன் தொடக்கத்தில் மழை பெய்து வருவதால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொல்லிமலையில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்யப்படட 5-வது ஆண்டில் இருந்து நல்ல மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம். எனினும், கொல்லிமலை பகுதியில் 40 முதல் 45 ஆண்டு வரை மிளகு கொடியில் இருந்து மகசூல் எடுக்கின்றனர்.
மிளகை பொறுத்தவரை பூ வைக்கும் சீஸன் சமயத்தில் மழை பெய்தால் காய் பிடிப்பு நன்றாக இருக்கும்.
தற்போது பூ வைக்கும் சீஸன் தொடங்கியுள்ள நிலையில், போதிய மழை பெய்து வருவதால் இந்தாண்டு மகசூல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கொல்லிமலையில் மிளகு இயற்கையான முறையில் விளைவிப்பதால் இதனை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் மிளகிற்கு இயற்கை சாகுபடி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஏறத்தாழ 180 ஹெக்டேர் பரப்பளவிலான மிளகுக்கு இச்சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சான்றிதழ் வழங்கப்பட்டால் அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago