புதுக்கோட்டை மாவட்டம் அணவயலில் அரசு நெல் கொள்முதல் செய்யக் கோரி நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அணவயல் (எல்.என் புரம்) நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த மாதத்துடன் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும், அங்கு தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கொள்முதல் நிலையத்தில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதையறிந்த விவசாயிகள் அங்கு கூடி, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் லாரியில் ஏற்றக்கூடாது எனக் கூறி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு போலீஸார் சமாதானப்படுத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், அணவயல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நெல் மணிகளை சாலையில் கொட்டியும், நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட டிராக்டரை சாலையில் நிறுத்தியும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago