தமிழகத்தில் ஒரே இடத்தில் 5 விபத்துகளுக்கு மேல் நடைபெற்றிருந்தால், அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். பொதுப்பணித் துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் மற்றும்- சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் தீரஜ் குமார், சென்னை- கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தின் திட்ட இயக்குநர் கா.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை- இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட ஆட்சியர்கள் தினேஷ் பொன்ராஜ் (தஞ்சாவூர்), அ.அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), இரா.லலிதா (மயிலாடுதுறை) மற்றும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியது:
திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உயர்நிலைப் பாலங்கள் அமைக்க வேண்டும் என்று உள்ளூர் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பூம்புகார் சுற்றுலாத் தலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கொம்பு கொள்ளிடம் மேலணை கட்டும் பணி 3 மாதங்களில் நிறைவடையும்.
முதல்வரின் அறிவுரையின்படி தமிழகத்தில் உள்ள 2 வழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும், 4 வழிச்சாலைகளை 6 வழிச் சாலைகளாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 5 விபத்துகளுக்கு மேல் நடைபெற்றிருந்தால், அந்தப் பகுதிகளை ஆய்வு செய்து, விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரப் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலைப் பணிகளில் நிலவும் தாமதங்களைத் தவிர்க்கும் வகையில், சாலைக்கான நிலமெடுப்பு, இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கென தனியாக மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago