திமுக ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களில் 1.80 கோடி கரோனா தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை என மாநில மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவத் துறையில் தற்காலிக அடிப்படையில் 30,000 பேர் உள்ள நிலையில் அவர்களை நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. மத்திய அரசு ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் வழங்க இருந்த நிலையில், தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி, கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகளை அளித்தது. இதேபோல, இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகளைத் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
தடுப்பூசி போடும் பணி தொடங்கிய ஜன.16-ம் தேதி முதல் மே 6 வரை 74 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 90 நாட்களில் 1.80 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனை என்றார்.
அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய சுகாதார இயக்க இயக்குநர் தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, கரோனா காலத்தில் மூளைச் சாவு அடைந்த சமயபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு நினைவு கேடயம், சான்றிதழ் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago