3 ஆண்டுக்கு முன் சண்டிகர் சென்ற - மத்திய ரிசர்வ் போலீஸ் ஏட்டு மாயம் : சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

நெல்லையிலிருந்து சண்டிகருக்கு பணியில் சேரச் சென்ற மத்திய ரிசர்வ் போலீஸ் மாயமான வழக்கில்சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த தெய்வக்கனி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் என். அண்ணாதுரை (36), மத்திய ரிசர்வ் போலீஸில் 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். எங்களுக்கு இருகுழந்தைகள் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய ரிசர்வ்போலீஸ் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த நிலையில் சண்டிகருக்கு மாற்றப்பட்டார். சண்டிகரில் பணிக்கு சேர்வதற்கு முன்பு 20 நாள்விடுமுறையில் நெல்லை வந்தார்.

விடுமுறை முடிந்து பணியில் சேர்வதற்காக 29.6.2018-ல் திருக்குறள் விரைவு ரயிலில் சென்றார். 1.7.2018-ல் செல்போனில் என்னிடம் பேசி டெல்லி வந்துவிட்டதாகத் தெரிவித்தார். அதன்பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ்படைக்குத் தகவல் தெரிவித்தேன்.

டெல்லி போலீஸ்காரர் பிரமோத்குமார் 2..7.2018-ல் என்னிடம் செல்போனில் பேசி கணவரின் உடமைகள் மட்டும் வந்திருப்பதாக தெரிவித்தார். கணவர் மாயமானது தொடர்பாக நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்ததன் பேரில் பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் கணவரை கண்டுபிடிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எனத் தெரியவில்லை. கணவர் மாயமான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.24-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்