நாடு முழுவதும் 9-வது தவணையாக - 9.75 கோடி விவசாயிகள் கணக்கில் ரூ.19,500 கோடி செலுத்தப்பட்டது :

By செய்திப்பிரிவு

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 9.75 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 9-வது தவணையாக ரூ.19.500 கோடி நேற்று செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயி களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம், 3 தவணைகளாக வழங்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 9.75 கோடி விவசாயி களின் வங்கிக் கணக்கில் 9-வது தவணையாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.19,500 கோடி நேற்று செலுத்தப்பட்டது.

இந்தத் தொகையை விடுவிப்பது தொடர்பாக காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சில பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தி யில் இந்தியா சுயசார்பை எட்டியுள் ளது. ஆனால், சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, சமையல் எண் ணெய் உற்பத்தியில் சுயசார்பை எட்டுவதற்காக தேசிய சமையல் எண்ணெய் திட்டம் - பனை எண் ணெய் (என்எம்இஓ-ஓபி) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு விவ சாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். தர மான எண்ணெய் வித்துகள், விவசாயப் பணிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் உள்ளிட்டவை பனை எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய் உற்பத்திக்கு அளிக்கப்படும்.

தற்போது இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கு 55 சதவீதமாக உள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடி செலவாகிறது. இறக்குமதிக்காகும் செலவு நமது விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்று அரசு கருதுகிறது. பனை எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பனை சாகுபடியை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசும்போது, ‘‘கடந்த ஆண்டு கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகள் கடுமையாக உழைத்தனர். இதனால் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. இந்த ஆண்டிலும் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண் இணை அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, சோபா கரந்தலாஜே, துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் உள்ள விவசாயி களுக்கு இதுவரை ரூ.1.57 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்