தி.மலையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி - நியாய விலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

7 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு சதவீதம் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து கடைகளுக்கும் 4- ஜி விற்பனை முனையம் மற்றும் சிம் கார்டு வழங்க வேண்டும். விற்பனை முனையத்தில் ஏற்படும் பழுதுகளுக்கான செலவுத் தொகையை விற்பனை யாளர்களிடம் வசூலிக்கக் கூடாது. கரோனா தொற்று பரவல் உள்ளதால் கைவிரல் ரேகை பதிவு செய்வதை தவிர்த்து பயோ மெட்ரிக் முறையில் கண்விழி திரை அடிப்படையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் நியாய விலை கடைகளில் இறக்கி வைக்கப்பட்ட பிறகுதான் விற்பனை முனையத்தில் (பிஓஎஸ் இயந்திரம்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமாக வழங்கப்பட வேண்டும். என்பிஎச்எச் குடும்ப அட்டைக்கு அரிசி வழங்கும் அளவை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சேகர் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திர ராஜா உரையாற்றினார். பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE