பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முல்லை தலைமை வகித்தார். இ.கம்யூ., நகரச் செயலாளர் ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தார்.
இதில், தொழிற் சங்க உரிமைகளை பறிக்கக்கூடாது, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளமாக வழங்க வேண்டும். பீடி தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதி யமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். ஆட்டோ, கட்டுமானம், சுமைப்பணி, தையல், சாலை போக்குவரத்து, சாலையோர சிறுவியாபாரம், விசைத்தறி உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர் களின் வாரிய பதிவை எளிமைப்படுத்தி பணப்பயன்கள் அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப் பட்ட வேளாண் கடன்கள் ரத்து என்ற அறிவிப்பை முழுமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஆறுகளை இணைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்க வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
காவிரியில் இருந்து தெற்கு நோக்கி உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வாணியம்பாடி எல்ஐசி அலுவலகம் முன்பாக தொழிற் சங்க நிர்வாகிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago