கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக ஆகஸ்ட் 13-ம் தேதிவரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்க வேண்டும்.
அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டுக்கான கோவை மாவட்டத்திலுள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி, முதல்வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், அந்த பள்ளியில் பெற்றோருக்கு ஒப்புகைச்சீட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை பள்ளிகளிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.
இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, புகைப்படம், பிறப்பு சான்று அல்லது பிறப்பு சான்றுக்கான பிற ஆவணம், இருப்பிட சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெற்ற நிரந்தர ஆவணங்களின் நகல், ஜாதிச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கோவை மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 4,710 இடங்கள் உள்ளன. இதில், கடந்த 3-ம் தேதிவரை 2,511 விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, மீதமுள்ள இடங்களுக்கு பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago