கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2-ம் அலை பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்றே அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில் வார நாட்களில் அத்தியாவசிய தேவையுள்ள கடைகள் தவிர, பிற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க முக்கிய வணிக வீதிகளை மூடவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகரில் கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, 100 அடி சாலை, காந்திபுரம் பிரதான வீதிகள், ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதனால் அப்பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பிட்ட வீதிகள் தவிர, பிற வீதிகளில் உள்ள கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட்டன. பூங்காக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் அதிகம் கூடாத வகையில் பொது இடங்கள் உட்பட மாநகர், புறநகர் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago