பட்டியல் இனத்தவர்களை இழிவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் வசிப்பவர் நடிகை மீரா மிதுன். மிஸ் தென் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உள்ளிட்ட அழகி பட்டங்களை வென்றுள்ளார். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு சர்சைகளில் சிக்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நடிகர்கள் சூர்யா, விஜய் உள்ளிட்டோரின் மனைவிகள் பற்றி கருத்து தெரிவித்து அவர்களின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் மீரா மிதுன். இவர் மீது காவல் நிலையங்களிலும் புகார்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை யூ டியூப்பில் பதிவிட்டார். அதில், குறிப்பிட்ட ஜாதி பெயரை குறிப்பிட்டு, அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை பற்றி இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீரா மிதுனின் இப்பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், ‘மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக திட்டி வீடியோ பதிவிட்டுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தையே மிகக் கேவலமாகவும், மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டும் அல்லாமல் திரைப்படத் துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார். அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் (SC/ST Prevention Act) உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago