மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், அவரது நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராஜபாளையம் அருகிலுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்கள் காசிமணி(45). இவரது மனைவி ராமுகளஞ்சியம்(42). இவர்களது மகன் ராகுல். இவர்களுடைய உறவினர்கள் தலைமலை, கவுதம். தலைமலைக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவர்கள் மதுரையில் துணி, நகை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு காரில் நேற்று ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை கே.புதூரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஜபுதீன்(45) உட்பட 4 பேர் பேரையூர் பகுதியில் கோயில் கிடா வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு காரில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருமங்கலம்-குற்றாலம் சாலையில் பாண்டியன் கிரஷர் ஆலை அருகே சென்றபோது, முகமது ரஜபுதீன் காரும், காசிமணி குடும்பத்தினர் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது.
இதில் முகமது ரஜபுதீன், அவரது 2 நண்பர்களும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். இவர்களுடன் வந்த ஒருவருக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொரு காரில் வந்த காசிமணி உட்பட 5 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
எலும்பு முறிவு ஏற்பட்ட வழக்கறிஞரின் நண்பர் மற்றும் காசிமணி உட்பட 5 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீ ஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago