கிருஷ்ணகிரி மாவட்டம் கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன்(28). கட்டிடத் தொழிலாளியான இவர், தனது செல்போனில் தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் பேசியுள்ளார். அதன்பின் இவர்களிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு மஞ்சுநாதன் செல்போன் வாங்கிக்கொடுத்துள்ளார். சில நாட்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், செல்போனை அப்பெண் திரும்ப கொடுத்துவிட்டார்.
அதன்பின் அந்த பெண்ணின் முகநூல் கணக்கில் இருந்தே அவரது புகைப்படத்துடன் தவறாக சித்தரித்து மஞ்சுநாதன் பதிவிட்டுள்ளார். மேலும், வாட்ஸ்அப்பிலும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் செய்தார். தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாதனை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
“அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செல்போன் அழைப்புகளுக்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டாம். சமூக வலைதளங்களில் தங்களது சுய விவரங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம்.
இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் தயங்காமல் புகார் அளிக்கலாம். அவர்களது பெயர் ரகசியமாக வைக்கப்படும்” என, எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago