சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில், உலக தாய்ப்பால் வாரவிழா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
பிரச்சார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்) செ.ஜெய்சூர்யா, மாநகர நல அலுவலர் சரோஜா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. தாய்ப்பாலின் மகத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த கோலப்போட்டி, வாசகம் எழுதும் போட்டி மற்றும் வினாடி - வினா போட்டி நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ல.சரஸ்வதி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் அமிர்தலீனா, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் (சுகாதாரப்பணிகள்) அப்துல்காதர், மானூர் வட்டார மருத்துவ அலுவலர் தேவஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆர்.ராஜபிரியா நன்றி கூறினார்.
விழாவில் தாய்ப்பால் அதிகரிக்ககூடிய உணவுகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுகள், கீரை வகைகள், தானியங்கள் குறித்த கண்காட்சி அங்கன்வாடி பணியாளர்களால் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு அளிக்கக்கூடிய உணவுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago